விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படும். அவ்வாறு சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில், விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புதுறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.
வழக்கம்போல் ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டும், சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது (நீதிமன்ற ஆணைப்படி). நிறுவப்படும் சிலைகள் வழக்கம்போல் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. சிலை இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும்.
சிலைகளை கரைக்கும் இடத்திற்கு செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும், விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.
மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
No comments