Breaking News

தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை ரூபாய் 40 கோடி அளவிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது! - மேயர் தகவல்.


தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை ரூபாய் 40 கோடி அளவிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது! தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்!


தூத்துக்குடி மாநகராட்சியில் ஓவ்வொரு புதன்கிழமையும் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள்குறைதீர் முகாம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜெஎஸ்நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 


முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசுவாமி வரவேற்றார். முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, மழைநீர் தேங்கிய பகுதியில், புதிய கால்வாய் பணிகள், சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


மாநகராட்சியில் ஏற்கனவே நடைபெற்ற மக்கள்குறைதீர் முகாமில், நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொத்துவரி, குடிதண்ணீர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. 


அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூரி, பள்ளி, மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அந்த பணி நடைபெறுகிறது. மேலும், புதிய சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் போன்றவற்றிற்கு முக்கியத்துவத்துவத்தின் அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.


முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முழுமையாக ஒருபுறம் 300 மீட்டரும், மறுபுரம் 180 மீட்டரும் அகலம் கொண்டதாகும் அதை முழுமையாக சீரமைத்து மழை காலங்களில் வரும் தேவையற்ற நீரை கடலுக்குள் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மணல் அரிப்பை தடுப்பதற்கு மரங்கள் நடுவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அத்திரமரப்பட்டி, முள்ளக்காடு பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையடுத்து ஜெஎஸ்நகரில் ஒரு பூங்கா அமைக்கப்படும். 


மாநகராட்சி பகுதியில் தனியார் ஆக்கிரமித்து வைத்து இருந்த ரூ.40 கோடி மதிப்பிலான இடம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 153 மனுக்களில் 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. வீடு கட்டும்போது குடிநீர் இணைப்புக்கும் விண்ணப்பித்து உடனடியாக இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்றார். முகாமில், பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு 15 நிமிடத்தில் அச்சான்றிதழை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.




நிகழ்ச்சியில், துணை ஆணையர் ராஜாராம், செயற் பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் விஜயகுமார், முத்துமாரி, வைதேகி, ராஜேந்திரன், பட்சிராஜ், சரவணக்குமார், ராஜதுரை, சுயம்பு, முத்துவேல், வெற்றிச்செல்வன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!