தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு குப்பையில் கிடந்ததால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எட்டயபுரம் ராஜா நகரில் உள்ள மைசூரான் கண்மாய்க்குதண்ணீர் கொண்டு வரும் 20 அடி அகலமுள்ள பெரிய நீரோடையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே, இப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கவும், கால்நடை பயன்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மைசூரான் காண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நீரோடையை மீட்டுத்தர வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் அய்யனார் கொடுத்த புகார் மனு மற்றும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கோட்டாட்சியர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவை கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே குப்பையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் வாழைப்பழ கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் குப்பையில் கிடந்த தபாலை எடுத்து அதிலிருந்து அய்யனார் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தபால் கீழே கிடந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அய்யனார் தனது நண்பர் மூலமாக அந்த தபாலை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அய்யனார் தனது புகார் மனு குப்பையில் கிடந்தது குறித்தும்,, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் மகாலட்சுமி, மனு குப்பை தொட்டியில் கிடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதா என கேட்டார். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம். உங்களது மனு தொடர்பாக நில அளவையர் மூலம் அளந்து பார்த்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு மற்றும் கோட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய மனு குப்பையில் கிடந்தது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டாட்சியிடம் மனு அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொழிற்சங்கத்தை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.
அய்யனார் கொடுத்த புகார் மனு மீது, நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடவடிக்கைகாக அனுப்பப்பட்ட மனு குப்பையில் கிடந்த விஷயம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
No comments