Breaking News

புதுச்சேரிக்கு விரைவில் புதிய தலைமை செயலகம், ரூ.576கோடியில் அமைய உள்ளது - சபாநாயகர் தகவல்.


புதுச்சேரியில் ரூபாய் 576 கோடி மதிப்பில் தலைமைச் செயலகத்துடன் கூடிய புதிய சட்டமன்ற வளாகம் கட்ட கவர்னர் ஓப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு விற்பனை கூடம் அருகே சுமார் 15 இயக்க நிலப்பரப்பில் ரூ.576 கோடி மதிப்பில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டசபை கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், மத்திய உள்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம், கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.


ஜிப்மரில் இரட்டை குடியுரிமை பெற்று சேர்ந்துள்ள 9 மாணவர்களை நீக்கிவிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் வழங்க கவர்னர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், மக்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை குறைக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.


புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக 3 அதிகாரம் மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு அதிகார மையமாக புதுவை அரசு செயல்பட்டு வருகிறது என்றும் 2 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் வேகம் எடுக்கும் என்றார்.


- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!