மயிலாடுதுறை அடுத்த தலைஞாயிறு-2 ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு-2 ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் 59 பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 92 ஆயிரத்து 333 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசிய போது: தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுடன் முதல்வரில் நிறைய மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாதம் ஒருமுறை அனைத்து அலுவலர்களும் ஒரு தாலுக்காவிற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நிறை, குறைகளை கேட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. நீங்கள் நலமா என்ற திட்டம் மூலமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
நமது மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் நிறைய மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமானது மாதம் ஒரு முறை ஒரு தாலுக்காவில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, முடிந்தளவிற்கு மக்கள் பிரதிநிதி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி தமிழ்நாடு அரசே முன்வந்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காணும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பொதுவாக, மக்கள் நேர்காணல் முகாம் என்பது தமிழ்நாடு அரசின் திட்டங்களை காட்சிப்படுத்துவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், துறை சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்து கூறுவார்கள்.
இன்றைய தினம், இம்முகாமில் வருவாய் துறை சார்பாக 49 பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ.84 ஆயிரத்து 500 மதிப்பிலான முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகைக்கான ஆணைகளும், வேளாண்மைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.2833 மதிப்பிலான இடுபொருட்களும் ஆக மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 92 ஆயிரத்து 333 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், வட்டாட்சியர் விஜயராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் களியம்மாள், தலைஞாயிறு ஊராட்சிமன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், வரதம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments