முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள்.
முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தனியார் சோப்பு (ஜோதி லேப்) தயாரிக்கும் தொழிற்சாலையில் காரைக்காலைச் சேர்ந்த லாரிகள் வெளி மாநிலங்களுக்கு சுமை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த வாடகையை குறைத்து விட்டதாகவும், இதனிடையே வெளியூர்களில் இருந்து வாடகைக்கு எடுக்கும் லாரிகளுக்கு அதிக வாடகை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து திருநள்ளாறு தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட போவதாக காரைக்கால் மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து காரைக்கால் மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தினர் தனியார் சோப்பு தொழிற்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்தி தர வேண்டும், அரசு நிர்ணயித்துள்ளது போல டன் கணக்கிற்கு ஏற்ப வாடகை தர வேண்டும், சுமை ஏற்றும் விபரத்தை சங்கத்திடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments