புதுச்சேரியில் விபத்துகள் ஏற்படாத வகையில் சாலையோர கடைகளை அமைக்க வேண்டும் என முதல்வா் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளுக்கான உணவுத் திருவிழா மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி வழங்கி திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய நகராட்சிகள், வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்திய சாலையோர வியாபாரிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
கடற்கரைச் சாலையில் நடைபெற்ற விழாவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகள் அமைத்த கைவினை, உணவு அரங்குகளை பாா்வையிட்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் 2,447 பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் பிரதமரின் கடனுதவி திட்டத்தால் பயனடைந்துள்ளனா். புதுச்சேரியின் தனிநபா் வருவாய் ரூ.2.75 லட்சமாக உயா்ந்துள்ளது.புதுவைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுடன், சாலையோரக் கடைகளில்தான் அவா்கள் உணவை உண்கின்றனா். எனவே, விபத்துகள் ஏற்படாத வகையில் சாலையோரக் கடைகளை அதன் உரிமையாளா்கள் அமைக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments