திருப்பத்தூர் அருகே சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்.
திருப்பத்தூர் அருகே ஆவணிப்பட்டியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராமத்தார்கள், இளைஞர்கள், சிங்கபூர்வாழ் இளைஞர்களால் இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஆவணிப்பட்டி - கீழச்சிவல்பட்டி சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு, என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 26 ஜோடிகள் என மொத்தம் 36 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாடு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டதால் 13 மற்றும் 13 என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையும், இரண்டாவது பரிசாக 25 ஆயிரம், மூன்றாவது பரிசாக 20 ஆயிரம், நான்காவது பரிசாக 15 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று சிறியமாடு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையும், இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக 15 ரூபாய், நான்காவது பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் ரசித்ததோடு, சாரதிகளை உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.
No comments