தூத்துக்குடியில் டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர் பலி.
தூத்துக்குடி முத்தையாபுரம், துறைமுக சாலையில் டாக் (Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited) தொழிற்சாலை உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டாக்காம் என்ற நிறுவனம் மூலம் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையின் அமோனியா ப்ளாண்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஸ்பிக், மற்றும் டாக் நிறுவன தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் மஞ்சள்நீர்காயல், வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) என்பவர் உயிரிழந்தார். மேலும் தூத்துக்குடி காட்டன் சாலையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தனராஜ் (37), திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் மகன் மாரிமுத்து (24) உள்ளிட்ட 4 பேர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments