பழைய குற்றால அருவி வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது - அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை.
பழைய குற்றால அருவி வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், இது தொடர்பாக போராட்டங்கள் நடத்துவது என தென்காசியில் அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது. பழைய குற்றால அருவியானது பழமையான அருவியாகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சீசன் காலகட்டங்களில் விரும்பி நீராடக் கூடிய அருவியாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பழைய குற்றால அருவி இருக்கின்ற இடமானது வனத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால் பழைய குற்றால அருவி வனத்துறைக்கு சொந்தமானது என பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் பழைய குற்றாலம் பகுதியில் வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
இதனால் தற்போது பழைய குற்றால அருவி வனத்துறை வசம் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவி வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் வாயிலாக பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது மேலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும், மேலும் நீதிமன்றங்களை நாட உள்ளதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
No comments